RSS

சந்தர்ப்பம் - தன்னம்பிக்கை கதை

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.

சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள்  

உனக்கு இறக்கை எதற்கு?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!

முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!

ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தாதோரிடமிருந்து கணநேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!

பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக!

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள். இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார். ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காப்பாற்ற கடவுள் வருவார்?

ஒருவர் எதெற்கெடுத்தாலும் கடவுள் பார்த்துக்குவார்னு சொல்லிகொண்டே இருப்பான்.  ஒருநாள் அவர் வாழ்ந்த ஊரில் அடைமழை, வெள்ளம் வந்துவிட்டது.    ஊரார் எல்லாம் வெளியேறி கொண்டிருந்தார்கள்,  ஊரார் வெளியேறும் போது அவரையும் அழைத்தார்கள், ஆனால் அவனோ, இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொல்லி அங்கேயே இருந்தானாம். வெள்ளம் பெருகிவிட்டது. 

பிறகு ஒரு சிறு மரக்கட்டையில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு வானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு கொடுத்தார்கள் இதுலாவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து, என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  இறுதியில் வெள்ளம் அதிகமாகி அதனுடன் அடித்து சென்று அவன் இறந்துவிட்டான்.

மேலே இறைவனிடம் சேர்ந்தார்.  அவன் இறைவனை பார்த்து  கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.  அதற்கு கடவுள் சொன்னாராம்,

அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வெவ்வேறு வழிமுறையில் வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.
இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வழியில் தான் உதவுவார்.  வாய்ப்புகள் இப்படி தான் வரும், கடவும் வருவார்ன்னு உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் அகபோவதில்ல, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள், வாழ்வில் முன்னேறுங்கள் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒருவனை எதிர்கொள்ள உருவம் தடையல்ல..!

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் யாரையும்  ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு 'ஈ'  ஏய் !  நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை.
அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை பாடாய் படுத்தி பாடம் புகட்டிவிட்டதே!. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது
நன்றி: பணிப்புலம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா?

ஒரு ஊரில் கோபு  தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று நபர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

கோபுவின் தந்தை 'வாருங்கள்' என்றார்.

ஐயா! 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது!. யாராவது ஒருவர் தான் வரமுடியும்.

என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்.. எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

கோபுவின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் கோபுவோ ...'அப்பா! பணத்தையே உள்ளே அழைக்கலாம் நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் கோபுவின்  தாயோ 'வேண்டாம் அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடனே கோபுவின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

ஆண்டு பற்றி வள்ளுவனின் வாக்கு

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.
நன்றி: பணிப்புலம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடா முயற்சி வெற்றி தரும்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உண்மையான அழகு எது? - அம்மா சிறப்பு கவிதை

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.

"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.

நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?

நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.

அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.

வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...

அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். 

உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியது

வேடன் ஒருவன் தன்னுடைய வேட்டை நாயைக் கூட்டிகிட்டு வேட்டைக்குப் போனான்.

காட்டில் ஒரு முயலைப் பார்த்தார்கள். வேடன் அந்த நாயிடம் சொன்னான், “நீ ஓடிப் போய் அந்த முயலைப் பிடித்து உன்னுடைய உணவாக்கிக் கொள்” என்று. நாய் வேகமாக முயலைத் துரத்திகொண்டு ஓடியது. ஆனால் முயல் அதை விட வேகமாக ஓடி, வேட்டை நாயிடமிருந்து தப்பி சென்றுவிட்டது. தோல்வியுடன் திரும்பி வந்த நாயைப் பார்த்து வேடன் கேலி செய்தான். “உனக்கு வேகமாக ஓடி, இரையைப் பிடிக்க கொடுத்த பயிற்சியெல்லாம் என்ன ஆச்சு?, ஒரு சின்ன முயலிடம் தோற்றுவிட்டாயே” என்று.

நாய் சொல்லியது, “நான் ஓடியது என்னுடைய ஒரு வேளை உணவுக்காக, ஆனால் அந்த முயல் ஓடியதோ தன்னுடைய உயிரைக் காப்பாத்திக்க”

நம்முடைய நோக்கமும் முயற்சியும் தீவிரமானதாக இருந்தால், நம்மை விட வலியவனவற்றையும் ஜெயிக்கலாம்.

கொல்லும் உள்ளுணர்வை விட வாழும் உள்ளுணர்வு பெரியதுதானே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும்

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்