RSS

கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே !

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

நான் ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ என்று கேட்க ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும்  அவன் சிரித்தான்.

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’ என் ஊரார்கள் கேட்க

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’ என்றான்

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’ ன்னு கேட்டான்

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’

நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தத்தளித்த எறும்பும் காப்பாற்றிய புறாவும்

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.


எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நரியின் சூழ்ச்சியில் சிக்கிய மான் | சிந்தித்து செயல்படு!

ஒரு காட்டில் நன்கு அடர்ந்த வளர்ந்திருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தில், அளவுக்கு அதிகமான விழுதுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பக்கமாக ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அன்றைய தினம் ஒரு இரையும் அதற்கு கிடைக்கவில்லை.


மான் குட்டி ஒன்று அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்த நரிக்கு ஒரு யோசனை வந்தது. அதைச் செயல்படுத்தவும் ஆயத்தமானது. அதனிடம் சென்று, "ஏ! மான் குட்டியே... உன்னால் எனக்குச் சமமாக ஓட முடியுமா? துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடத் தெரியுமா?'' என்றது.

இதைக்கேட்ட மான்குட்டி, "ஓ! நான் நன்றாகவே ஓடுவேனே!'' என்று விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதனுடன் நரியும் ஓடிவந்தது. ஆலமரத்தின் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந்ததால், ஆலமரத்தின் விழுதுகள், வேகமாக வந்த மான்குட்டியின் வயிற்றிலும், கழுத்திலுமாக சிக்கிக் கொண்டன. இதனால், அது தரையிறங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நரி, ஹா... ஹா... ஹா... என்று சிரித்துக் கொண்டே, ""ஏ! மான்குட்டியே... நன்றாக மாட்டிக் கொண்டாயா! இதோ இன்னும் சற்று நேரத்தில் குளித்து விட்டு வருகிறேன். இன்று நீதான் எனக்கு விருந்து,'' என்று சொல்லிவிட்டு அருகிலுள்ள ஒரு குளத்தை நோக்கிச் சென்றது.

ஆபத்தில் மாட்டிக் கொண்ட மான்குட்டி, "தன்னை விடுவிக்க யாரும் வரமாட்டார்களா?' என்று தவித்துக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் மேலே ஏற்கனவே உட்கார்ந்திருந்த குரங்கை இந்த நரியும், மான் குட்டியும் கவனிக்கவில்லை.

குரங்கானது மான்குட்டியை அழைத்தது. "ஏ! மான்குட்டியே... எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். யார் எதைச் சொன்னாலும், எதற்குச் சொல்கின்றனர் என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அதிலும் இந்த நரி உன் இனத்தாரின் எதிரி அல்லவா? மற்றவர்களை தந்திரமாக ஆபத்தில் சிக்க வைப்பதில் கைதேர்ந்ததாயிற்றே! இனிமேலாவது சிந்தித்துச் செயல்படு,'' என்று கூறி, மான்குட்டியின் மீது சிக்கியிருந்த விழுதுகளை அப்புறப்படுத்தி அதை விடுவித்தது.

"என்னை மன்னித்து விடுங்கள்! இனி இவ்வாறு சிந்திக்காமல் செயல்படமாட்டேன்,'' என்றது மான் குட்டி. "சரி! சரி! உணர்ந்து கொண்டால் சரிதான். நீ உடனே அந்த நரி வருவதற்குள்ளாக இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு,'' என்று கூறியது. மான் குட்டியும் தன்னைக் காப்பாற்றிய குரங்குக்கு, "நன்றி' கூறிவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி மறைந்தது.

திரும்பி வந்த நரி, மரத்தின் அருகில் மான் குட்டியை காணாததைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்தது. அதை மரத்தின் மீது இருந்து கண்ட குரங்கு ஹா... ஹா...வென்று சிரித்து நரிக்கு பாடம் புகட்டியது! "ஏமாற்றாதே ஏமாறாதே..." என பாடி கிண்டல் செய்தது.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும்

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பயணி அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். அதன் பிறகு அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது  பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன் என்றான். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று கூறிவிட்டு புகைவண்டியின் தனது இருக்கை நோக்கி நடந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த பயணி ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்பு இரயில்நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவனும் அருமையான கோட் மற்றும் டை சகிதமான உடையில்  விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் பயணியை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

"அன்பரே..நீங்கள் என்னை  மனது போய் இருக்கலாம். ஆனால் நான்
உங்களால் தான் இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். என்றான் கோட் சூட் வாலிபன். பயணியிடம் பழைய ரயில் நிலைய 5 ரூபாய் கதையை நினைவூட்டினான்.

பயணி சொன்னார் : - "எனக்கு நினைவு வந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது..என்னப்பா?".

கோட் சூட் வாலிபன் சொன்னான் - "நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்". "எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். 
அதுவரையில் பிச்சைகாரனாக திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்". "அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர் வரையில் நான் ஒரு சோம்பேறியாக, அழுக்காக, பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக, யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். பிறகு தான் சிந்திக்க ஆரம்பித்தேன். "நான் யார்? என்று.

எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். அதன் பின் ஒரு முடிவுக்கு வந்தேன், வாழும் வரை எதையாவது சாதித்துவிட்டு போகலாமே என்று என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தினேன் எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அன்பரே", என்றான் 

நன்றி: ஷரா

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்!

பெற்றோர்களுக்கான  சிறப்பு கட்டுரை  

தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கார்டூன் சேனல்களும், யுடுயுப்பில் ரைம்ஸ் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், கிரியேட்டிவிட்டியும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

தமிழ் அறிவு கதைகள்


நேரம் செலவிடலாம்

இரவு நேரத்தில் படுத்துக்கொண்டே கதை கேட்பது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று எனவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய கதைகளை சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவிட முடிகிறது.

தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது. நல்ல கதைகளை கூறுங்கள். அரிச்சந்திரன், சிரவணன் கதைகள்தான் மகாத்மா காந்தியை உருவாக்கியது.

வாழ்க்கைக் பாடம் புரியும்

கதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.

பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.

கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

டிவி, கணினி போன்ற மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோர்கள், குழந்தைகள் இடையேயான உரையாடல் என்பது குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

நம்பிக்கை வளரும்

கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.

கற்பனை வளரும்

குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். கிரியேட்டிவிட்டி, கற்பனை திறன் வளரும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கடவுளைத் திருடியவர்கள்ஒரு அழகான குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு மகன்கள் வாழ்ந்து வந்தனர், இரு மகன்களும் பெற்றோர்களுக்கு தொல்லைதரும் விஷயங்கள் மட்டுமே செய்து கொடிருப்பர்கள், திருடுவது, பொய் சொல்வது, அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடிப்பது என எப்போதும்  கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் திருத்த எத்தனையோ முறை முயன்று, தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள், இருவரையும் ஒரு பாதிரியாரிடம் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்..

பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர் முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்தார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியாக, ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.

அதற்க்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில் சொல்’

அவன் விழித்தான்.

‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு சொல்லப் போறியா இல்லையா?’

அவன் அழ ஆரம்பித்தான்.

‘சரி. நீ போ. உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’ என்றார்

அவன் வேகமாக அறையை விட்டு ஓடிப்போய் தனது சகோதரனிடம் சொன்னான். ‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். கடவுளைக் காணோமாம் . நாம்தான் திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’ என்று...!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நாமே கடவுள் ஆகி விட முடியாது

ஒரு கடுமையான உழைப்பாளி. எப்போதுமே ஏதாவது ஒரு ஆராய்ச்சியை அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார்.ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே எப்போதும் அதாவது அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள்.அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் முழ்கி இருப்பார் அந்த சமயம் இந்த இரு பூனைகள் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடுமாம்.

இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவற விட்டாராம். பிறகு தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து,இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளை பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினாராம்.

அவரது வேலையாள், திடீரென ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும்,போகும்.அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றாராம். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லையாம். அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின.

பிறகு அவர் கூறியதை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டாராம். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன். தான் தான் கண்டுபிடித்தோம் அதனால் நாமே கடவுள் ஆகி விட முடியாது என்பது அவருக்கு நன்றாக உரைத்ததாம். எனவே நண்பர்களே யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறவாதீர்கள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வாக்கு மாறாத பசு - உயிரை மாய்த்துக்கொண்ட புலி

காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன. 

  
அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது.

புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”. புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?


புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு


புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு


பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.
அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்


அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன்.  இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.


புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக” சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்கமாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.


புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.


நன்றி : என்.கணேசன் ப்ளாக்ஸ்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு

ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள்.
 
இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார். 

சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான். 

இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ... நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன். 

வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.

போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான்.

போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு "வாவா...ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?" என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு "என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்" என்றார். 

"இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்...உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும்.

பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

முட்டாள் சீடனும் நொந்துபோன குருவும்

ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்தது இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.


அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமத்துகிரார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள் . அங்கும் அதையே கொடுத்தார்கள்.

இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள்  என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என் கடைக்காரன் வினவினான். ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஓசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும்

வாழ்க்கைக்கு தேவையான்,  அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும்

உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்?
அவனது நன்மதி

இவுலகில் மிகவும் மேன்மையானது எது?
கல்வி

உலகின் மிகவும் ஆழமான குழி எது?
ஒரு பெண்ணின் மனது.

ஒருமுறை இழந்தான் மீண்டும் கிடைக்காதது எது ?
வாழ்க்கை

உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது?
ஒருவரின் மரணம் வரை

காற்றைவிட வேகமான பயணம் செய்வது  எது?
மனிதனின் கற்பனை

உலகிலேயே இனிமையான ஒன்று எது?
குழந்தையின் புன்னைகை

நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தி தான்

மூன்று நண்பர்கள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . திடீரென ஒரு புலி வந்துவிட்டது.  ஒருவன் சொன்னான் "இன்றோடு நம் கதை முடிந்துவிடும்" என்று...! இரண்டாமவன் "நாம் ஏன் சாகவேண்டும் வாருங்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்வோம்" என்றான்.மூன்றாமவன் சொன்னான் நாம் ஏன் பகவானை கஷ்டபடுத்த வேண்டும், வாருங்க மரத்தின் மீது ஏறிகொள்வோம்" என்றான்.

"இன்றோடு செத்தோம்" என்று சொன்னவனுக்கு, பகவான் இருக்கிறார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்ற உண்மையை அறியவில்லை.

வாருங்கள் "பகவானிடம் பிரார்தனை செய்வோம்" என்று சொன்னவன் ஞானி. பகவான் தான் படைத்தல் காத்தல் அழித்தல் எல்லாம் என்ற உணர்வு இருந்தது.

நாம் ஏன் "பகவானை கஷ்டபடுத்த வேண்டும்" என்று சொன்னவன் இருக்கிறானே..! அவனுடைய உள்ளத்தில் தான் பிரேமை உதித்திருந்தது. அன்பு தோன்றி இருந்தது.

தன்னை பெரியவனாகவும், தன் அன்புக்கு உரியவனை சிறியவனாக கருதுவது பிரேம பக்தியின் இயல்பு . தான் "நேசிப்பவனுக்கு கஷ்டம் கூடாது" என்று எச்சரிக்கையுடன் பார்த்துகொள்ளும் இயல்பு அது.

தான் அன்பு செலுத்துபவனுக்கு ஒரு "சிறு துன்பம் கூட நேர்ந்துவிடக்கூடாது" என்று கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவனது விருப்பம்.

உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தியின் அடையாளம் தான்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஒற்றுமையே பலம்

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள்.  ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.

நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார்,  அவர்களும்  கொண்டு வந்தார்கள்.  தன மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.

பிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.

பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.

ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாருளும் உங்களை அசைக்க முடியாது  என்று கூறினார்.

நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, "நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது' என்று நினைத்துக் கொண்டிருந்தது.

Tamil Arivu Kadhaikal


ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:

""ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.''

சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:

""அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.''

பிறகு ஈ பறந்து சென்றது.

""இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

“ஐயோ” ன்னு சொல்லாதீங்க?

ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

Tamil Arivu Kadhaikal

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்