RSS

நரியின் சூழ்ச்சியில் சிக்கிய மான் | சிந்தித்து செயல்படு!

ஒரு காட்டில் நன்கு அடர்ந்த வளர்ந்திருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தில், அளவுக்கு அதிகமான விழுதுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பக்கமாக ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அன்றைய தினம் ஒரு இரையும் அதற்கு கிடைக்கவில்லை.


மான் குட்டி ஒன்று அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்த நரிக்கு ஒரு யோசனை வந்தது. அதைச் செயல்படுத்தவும் ஆயத்தமானது. அதனிடம் சென்று, "ஏ! மான் குட்டியே... உன்னால் எனக்குச் சமமாக ஓட முடியுமா? துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடத் தெரியுமா?'' என்றது.

இதைக்கேட்ட மான்குட்டி, "ஓ! நான் நன்றாகவே ஓடுவேனே!'' என்று விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதனுடன் நரியும் ஓடிவந்தது. ஆலமரத்தின் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந்ததால், ஆலமரத்தின் விழுதுகள், வேகமாக வந்த மான்குட்டியின் வயிற்றிலும், கழுத்திலுமாக சிக்கிக் கொண்டன. இதனால், அது தரையிறங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நரி, ஹா... ஹா... ஹா... என்று சிரித்துக் கொண்டே, ""ஏ! மான்குட்டியே... நன்றாக மாட்டிக் கொண்டாயா! இதோ இன்னும் சற்று நேரத்தில் குளித்து விட்டு வருகிறேன். இன்று நீதான் எனக்கு விருந்து,'' என்று சொல்லிவிட்டு அருகிலுள்ள ஒரு குளத்தை நோக்கிச் சென்றது.

ஆபத்தில் மாட்டிக் கொண்ட மான்குட்டி, "தன்னை விடுவிக்க யாரும் வரமாட்டார்களா?' என்று தவித்துக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் மேலே ஏற்கனவே உட்கார்ந்திருந்த குரங்கை இந்த நரியும், மான் குட்டியும் கவனிக்கவில்லை.

குரங்கானது மான்குட்டியை அழைத்தது. "ஏ! மான்குட்டியே... எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். யார் எதைச் சொன்னாலும், எதற்குச் சொல்கின்றனர் என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அதிலும் இந்த நரி உன் இனத்தாரின் எதிரி அல்லவா? மற்றவர்களை தந்திரமாக ஆபத்தில் சிக்க வைப்பதில் கைதேர்ந்ததாயிற்றே! இனிமேலாவது சிந்தித்துச் செயல்படு,'' என்று கூறி, மான்குட்டியின் மீது சிக்கியிருந்த விழுதுகளை அப்புறப்படுத்தி அதை விடுவித்தது.

"என்னை மன்னித்து விடுங்கள்! இனி இவ்வாறு சிந்திக்காமல் செயல்படமாட்டேன்,'' என்றது மான் குட்டி. "சரி! சரி! உணர்ந்து கொண்டால் சரிதான். நீ உடனே அந்த நரி வருவதற்குள்ளாக இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு,'' என்று கூறியது. மான் குட்டியும் தன்னைக் காப்பாற்றிய குரங்குக்கு, "நன்றி' கூறிவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி மறைந்தது.

திரும்பி வந்த நரி, மரத்தின் அருகில் மான் குட்டியை காணாததைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்தது. அதை மரத்தின் மீது இருந்து கண்ட குரங்கு ஹா... ஹா...வென்று சிரித்து நரிக்கு பாடம் புகட்டியது! "ஏமாற்றாதே ஏமாறாதே..." என பாடி கிண்டல் செய்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்