RSS

மரங்கொத்திப் பறவை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.  அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கைப் பயணம் - உழைப்பு


அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

 
உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது


எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

நன்றி: கண்ணகி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனம் தளராதே | எறும்பு கதை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றி மறவா சிங்கம்

நாட்டில் அடிமைகளாக மக்கள் இருந்த காலம்.

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரணதண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நன்றி: சிறுவர் மணி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்