RSS

காகமும் நாய்க்குட்டியும் | நீதிக் கதைகள்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.


இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
 
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

100 சதவீத அன்பை காட்டுங்கள் | தமிழ் அறிவு கதைகள்

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.


அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.


அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.


ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.

அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.

அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.

அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.


“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது.

அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது.

பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்