RSS

வாக்கு மாறாத பசு - உயிரை மாய்த்துக்கொண்ட புலி

காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன. 

  
அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது.

புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”. புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?


புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு


புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு


பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.
அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்


அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன்.  இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.


புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக” சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்கமாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.


புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.


நன்றி : என்.கணேசன் ப்ளாக்ஸ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்